உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. இதனால் சட்டமூலம் ஏகமானதாக சபையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்திம அபேரத்ன முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
உள்ளூராட்சி சபைகளுளுக்கு தேர்தல் நடாத்துவதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்ட நிலையில், தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் புதிதாக நடத்தப்பட்டால், புதிய நியமனப் பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.