முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், ஊழல் செய்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பியங்கர ஜயரத்ன அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சிலாபத்தில் உள்ள வங்கி ஒன்றில் பேணப்படும் கணக்கொன்றுக்கு ரூபா 4 இலட்சத்து 94 ஆயிரத்தை வைப்பிலிடுமாறு அதிகாரிகளை வற்புறுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு பதிவு செய்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூவாயிரம் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிடுவதால் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு ஏற்பட்ட ரூபா ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 520 இழப்பு தொடர்பாகவும், தனியார் நிறுவனமொன்றுக்கு ரூபா மூன்று இலட்சத்து 60 ஆயிரத்தைச் செலுத்தும் படி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.