கடவுச்சீட்டு விநியோகத்தை 24 மணிநேரமும் செயற்படுத்தத் தீர்மானம்: நாள் ஒன்றுக்கு நாலாயிரம் வழங்க ஏற்பாடு!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு நாலாயிரம் கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான மேலதிக பணிக்குழாமினரை குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதன் மூலமும் மற்றும் தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!