இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை டிஜிற்றல் முறைமையில் வழங்குவது பற்றி ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 4 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல், விண்ணப்பங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அட்டைகளில் அச்சிடப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக சுமார் 4 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல், விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. அவற்றை அச்சிட்டு விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காகத் தனியார் நிறுவனங்களிடம் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணியை ஒப்படைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
அதன் பின், சாரதி அனுமதிப் பத்திரத்தை டிஜிற்றல் முறைமையில் வழங்குவது பற்றி ஆராயப்படுகிறது. சாரதிகளின் திறன் பேசிகளில் அவற்றைப் பயன்படுத்த முடியும். தேவைப்படும் சாரதிகளுக்கு மட்டும் அச்சிட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.