யாழ்ப்பாண மநாகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னல்ட் முன்மொழியப்படவுள்ளார். இந்தத் தீர்மானம் இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனால் முன்மொழியப்பட்ட போது, அது பெரும்பான்மையின்றித் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து டிசெம்பர் 31 ஆம் திகதியன்று முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் இரண்டாவது தடவை வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காமலே தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அவரது பதவி விலகலையடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் உறுப்பினர்களுக்கிடையிலான தேர்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கடந்த 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதற்காக யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எனினும் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் அக்கூட்டம் முடிவேதும் எட்டப்படாமல் நேற்று முடிந்தது.
இன்று காலை மீண்டும் கூடிய கூட்டத்தின் போது, முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் முதல்வர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.