புகையிரதப் பயணத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று காலை எந்தவித ஆராவாரமுமின்றித் தனி ஒருவராகப் புகையிரதத்தில் பயணம் செய்துள்ளார்.
மொரட்டுவவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அலுவலக நேரப் புகையிரதத்தில், சன நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண பயணியாக அமைச்சர் பயணித்ததைக் கண்ட பொதுமக்கள் பலர் அமைச்சரைப் புகைப்படம் எடுத்துத் தமது சமூக வலைத் தளங்களில் வெளியிட்டதையடுத்தே அமைச்சர் புகையிரதத்தில் பயணித்த விடயம் ஊடகங்களுக்கு வெளிகியுள்ளது.
முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல், அதிகாரிகள் யாருக்கும் அறிவிக்காமல் அமைச்சர் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வுப் பயணத்தின் போது, புகையிரதங்களில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குப் பயணிகள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி ஏற்படும் பயணத் தாமதம், புகையிரதத்தினுள் மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத் திறனாளிகள் ரயிலில் ஏறும் போது ஏற்படும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலைமை போன்றவை பற்றி பயணிகள் அமைச்சரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.