தேசிய பொலீஸ் ஆணைக்குழு மீது ஜனாதிபதி அதிருப்தி!

தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் மீது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இடமாற்றங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் நடவடிக்கைள் மீதே அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பொலீஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை தனி ஒருவரது விருப்பப்படி செய்ய முடியாது என்றும், தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் மூலம் தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

“தேசிய பொலீஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் சிலரது இடமாற்றங்கள் குறித்து ஆணைக்குழு தயக்கம் காட்டியுள்ளது. அதனால், தேசிய பொலீஸ் ஆணைக்குழு மீது நானும் தயக்கம் காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது” என்றார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட பல இலஞ்ச, ஊழல் வழக்குகள் முன்னைய அரசாங்கங்கள் விசாரணைக்கு அனுமதியளிக்காததனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தேக்கமடைந்துள்ளன. இதனால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறையில் தாமதங்கள் மற்றும் தேக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவை அனைத்தும் நீக்கப்பட்டு, ஊழல் வழக்குகள் தொடர்பான பல கோப்புகள் மீண்டும் திறக்கப்பட்டு, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படும்.

கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு அதிகாரி மீதும் சுமார் 100 முதல் 200 கோப்புகள் உள்ளன. அவர்கள் மீது நீதிமன்றத்தில் எப்படி வழக்குகளை தாக்கல் செய்வது? இந்தக் குழப்பத்தின் காரணமாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு செயலிழந்து போயுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கடந்த கால புகார்களை இந்த மாதம் மீண்டும் திறந்து வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பிப்ரவரியில் இதுபோன்ற பல வழக்குகளை தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தேக்கமடைந்த வழக்குகளைத் தீர்ப்பதற்காக பல்வேறு புதிய நியமனங்கள் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!