இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
1978ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்துக்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தத்துவம் ஜனாதிபதிக்கு உரியதாகும். எனினும் நடைமுறையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்று நிருபத்துக்கு அமைவாக அந்தந்தப் பல்கலைக்கழகப் பேரவைகளால் நடாத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தெரிவு முறையொன்றின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி நியமிப்பது வழமையாக இருந்து வந்துள்ளது.
இந்த நடைமுறையை மாற்றுவது பற்றி அரச உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையிலும், ஒரு பல்கலைக்கழகத்துக்கு வேந்தர் நியமிக்கப்படாத நிலையிலும் இழுபறி நிலை நிலவுவதாகவும், அநேகமாக அடுத்தடுத்த வாரங்களில் – ஜனாதிபதி நாட்டுக்குத் திரும்பியதும் இதற்கான தீர்வு கிட்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி ஜீ.ஏ.எஸ். ஹினிகதரவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.
ருஹுண பல்கலைக்கழகத்தில் இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகியதை அடுத்து, பல்கலைக்கழகச் சட்டத்தின் படி கல்வி அமைச்சருக்குள்ள தத்துவத்தின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் பதவி வறிதாக்கப்பட்டு அவரது கடமைகளை ஆற்றுவதற்கென ஆர்.எம்.யூ.எஸ்.கே. ரத்நாயக்க தகுதி வாய்ந்த அதிகாரியாகப் பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதனின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை
இவைதவிர, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி. கனகசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுடையவுள்ள நிலையில், இதுவரை ஜனாதிபதியினால் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.