யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு வந்தோருக்கு சுகாதார பரிசோதனை!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றுக் கால சுகாதார நடைமுறைகளைப் போல பரிசோதனைக்கு உட்படுத்தியமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உறுப்பினர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக வந்த ஊடகவியலாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக் கவசம் அணிவிக்கப்பட்ட பின்னரே உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் கொரோனாப் பெருந் தொற்று அபாயம் குறைவடைந்துள்ள நிலையில், சுகாதாரத் திணைக்களத்தினால் கட்டாயமாக்கப்பட்டிருந்த சுகாதார நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்,  யாழ். மாநகர சபையில் – குறிப்பாக மாநகர சபைக் கூட்டத்தின் போது, சபை மண்டபத்தினுள் மட்டும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டமை உறுப்பினர்களிடையே ஐயத்தையும், விசனத்தையும் தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை அதிகாரிகளிடம் வினவிய போது, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் எழுத்து மூல அறிவுறுத்தலுக்கு அமையவே யாழ். மாநகர சுகாதார வைத்திய அதகாரி பணிமனையால் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!