தூய இலங்கை செயற்றிட்டத்துக்கு 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி அமைப்பு – முப்படைகளின் தளபதிகள் பதவிவழி உறுப்பினர்களாகப் பிரகடணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட “தூய இலங்கை” நிகழ்ச்சித் திட்டத்தைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செயலணியில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க,இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. எல். ஏ. சமன் பிரியந்த, நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர், பொறியியலாளர் குமுது லால் டி சில்வா, ஐ. எஸ். ஜயரத்ன, கிஹான் டி சில்வா, சந்தியா சல்காது, கலாநிதி காமினி பட்டுவிடகே, கலாநிதி அனுருத்த கமகே, தில்ருக் வனசிங்ஹ, தீபால் சூரியாரச்சி, சிசிர அமரபந்து, கிரிஷாந்த குரே, ஜயது பெரேரா, ருவன் வீரசூரிய, தயான் கருணாரத்ன ஆகியோர் ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டு, “தூய இலங்கை” நிகழ்ச்சித் திட்டத்தின் செயலணி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் குறித்த அதிவிஷேட வர்த்தமாணி நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டு, வர்த்ததமாணியில் வெளியிடப்பட்டுள்ள பணிகளின் விவரம் வருமாறு :

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு மற்றும் ஏனைய எழுதப்பட்ட சட்டங்களில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் கீழ்,

i. சமூக, கலாசார மற்றும் ஒழுக்கவியல் எழுச்சி மூலம் சமூகத்தை, மிகவும் அபிவிருத்தியடைந்த நிலைமைக்கு உயர்த்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக “தூய இலங்கை – Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டத்தை திட்டமிடல், வழிநடத்தல், நடைமுறைப்படுத்தல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் உரிய கால எல்லையொன்றுக்குள் பூர்த்தி செய்தல்.

ii. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் அமைப்புக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்தல்.

iii. “தூய இலங்கை – Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அறிவுடைய அறிஞர்கள், தொழில்வாண்மையாளர்கள், விசேட நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் விடயம் சார்ந்த அறிவு மற்றும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.

iv. அரச மற்றும் பகுதியளவு அரசதுறை, தனியார்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அபிவிருத்தி தரப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழிசார் அமைப்புக்கள், சமூகம் மற்றும் மக்கள் அமைப்புக்கள், வெகுசன ஊடக மற்றும் தொடர்பாடல் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மத ரீதியான அமைப்புக்கள், தொழிநுட்பம் வழங்குனர்கள் மற்றும் புத்தாக்குனர்கள், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் போன்ற தரப்பினர்களை இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக இணைத்துக்கொள்ளும் கட்டமைப்பு ஒன்றை தயாரித்தல்.

v. “தூய இலங்கை – Clean Sri Lanka” நிதியத்திற்கான நிதி வழங்குதல் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு “தூய இலங்கை – Clean Sri Lanka” நிதியத்தைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குதல்.

vi. இந்நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக அரச நிறுவனங்கள், தனியார் துறை, சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்ற பல்வேறு தரப்பினர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை இனம் காணல் மற்றும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை “தூய இலங்கை – Clean Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைத்தல்.

vii. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுபேறுகளின் நிலைபேறான தன்மையை உறுதிசெய்வதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை இனம் காணல், வகுத்தல் மற்றும் அத்தகைய சட்டங்களை நீண்டகாலத்திற்கு செயல்வலுப்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நிறுவன ரீதியான சட்டகமொன்றைத் தாபித்தல்.

viii. நிகழ்ச்சித் திட்டத்தை திட்டமிடல், வழிநடாத்தல், நடைமுறைப்படுத்தல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் நிலைபேறானதாக பேணிச் செல்வதற்காக டிஜிட்டல் மயப்படுத்தலைப் பயன்படுத்தல்.

ix. அனைத்து தரப்பினர்களையும் சாத்தியமான முறையில் ஊக்குவித்தல் மற்றும் தொடர்புபடுத்துவதற்காக பல்வகை தொடர்பாடல் மூலோபாயம் ஒன்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!