குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பெண் பொலீஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் எஸ்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமாலாவே குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலீஸ் ஆணைக்குழுவினால் 54 பொலீஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கான சிபாரிசு கடந்த மாதம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய, முதற்கட்டமாக பிரதிப் பொலீஸ்மா அதிபர்கள் உட்பட 41 பொலீஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பொலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேநேரம், கந்தல பொலீஸ் பிரிவில் பணியாற்றிய சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க பொலீஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும், பொலீஸ் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் பொலீஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றி வந்த பிரதிப் பொலீஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலீஸ்மா அதிபராகத் தொடர்ந்தும் கடமையாற்றவுள்ளார்.
இது தவிர பல்வேறுபட்ட அளவில் பிரதிப் பொலீஸ்மா அதிபர்கள் உட்பட பொலீஸ் அதிகாரிகள் பலர் உடனடியாகச் செயற்படும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலீஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.