கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை உடனடியாக நிவர்த்தி செய்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கான விசேட அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் சனிக்கிழமை ஒருதொகை கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து, திங்கட்கிழமை முதல் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடவுச்சீட்டுகளைப் புதிய விநியோகத்தரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முன்னைய விநியோகத்தர் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடவுச்சீட்டு விநியோக விலை வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு 750,000 புதிய கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குவதற்கு விநியோகத்தர் நீதிமன்றத்துக்கு உறுதியளித்திருந்தார். அதன்படி முதலாவது தொகுதி கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை கிடைத்ததும், திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.