வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க முன்னிலையில் அவர் இன்று வடக்கு மாகாண ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார். அவரது இடத்துக்கே முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகன் அரசாங்க அதிபராகப் பதவி வகித்த காலத்தில் ஆளும் கட்சியுடன் சேர்ந்தியங்கிய தமிழ் அரசியல் வாதிகளின் கடும் குடைச்சல் காரணமாகத் தனது ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே தானாக முன்வந்து வலிந்து ஓய்வு பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.