இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி யார் என்பதில் திடீர் திருப்பமொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாகவும், தமிழர் தரப்பின் விருப்பு வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கலாம் என்ற நிலை காணப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இன்று காலை 8 மணி வரை மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 50 சதவிகிதத்துக்கும் அதிகாமான வாக்குகளைப்பெற்று முன்னணியில் இருந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் வாக்கு வீதம் திடீரெனக் குறைந்து 40.21 சதவிகிதத்தை அடைந்திருக்கும் அதே நேரத்தில், காலை 8 மணி வரை 25 வீத வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வாக்கு வீதம் 32.61 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது.
இதனால், ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக – 50 சதவிகிதத்துக்கு மேலாக வேட்பாளர் எவரும் வாக்கு வீதத்தைப் பெறாத நிலையில், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு அமைய, விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முதலிரு இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜீத் பிரேமதாச ஆகியோரில் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள் அளிக்கும் விருப்புவாக்கு அடிப்படையில் முன்னிலை பெறுபவர் ஜனாதிபதியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னணி பெற்ற சஜீத் பிரேமதாசவுக்கு, தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் விருப்பு வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள அதே நேரம், வடக்குக்கு வெளியே உள்ள மக்களால் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, சஜித் பிரேமதாஸவுக்கோ அளிக்கப்பட்ட முதன்மை வாக்குகளில் அனுரகுமார திசநாயக்கவுக்கு விருப்பு வாக்குகளை இடுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானதாகவே காணப்படுகிறது என அவதானிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.