இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்குப் பொலீஸ் பாதுகாப்பு: கல்வி மற்றும் உயர்கல்வியை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த முனைப்பு?

கல்வி அமைச்சின் கீழ் வரும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் செய்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த மாதம் 02 ஆம் திகதி முதல் 54 நாட்களாகத் தொடர்சியாக மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாகப் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் செயலிழந்து போயுள்ளன. இந்த நிலையில், பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை வலிந்து வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரச உயர்மட்டம் ஆணைகளைப் பிறப்பித்திருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பாதுகாக்கும் வகையில், படையினரைப் பணிக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சின் செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் நேற்று விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று 25 ஆம் திகதி முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பொலீசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களை வலிந்து வழமைக்குக் கொண்டு வரும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் செய்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரயர் சம்பத் அமரதுங்க பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத பணியாளரகளுக்கான ஜூன் மாதச் சம்பளத்தை முற்பணமாக வழங்குவதற்கு மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் தலைமைச் செயலகங்களின் ஊடாக அந்தந்த வங்கிக் கிளைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!