யாழில் இணையப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடல்!

நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

“இணையப் பாதுகாப்புச் சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இணையப் பாதுகாப்புச் சட்டத்தினுடைய முறையற்ற தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.

அதேநேரம் இணையத்தில் இடம்பெறக்கூடிய வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அல்லது அதன் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாக்க வேண்டியதான ஒரு தேவைப்பாடு நிச்சயம் இலங்கையில் இருக்கின்றது,

இந்த இணையம் சார் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேக சட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அதில் யாருக்கும் மாற்று கருத்து இருப்பதற்கான வாய்ப்பில்லை, ஆனால் இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை உருவாக்குகின்ற போது பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து, வெளிநாட்டு நல்ல நடைமுறைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து சட்டத்தை நிதானமாகவும் தெளிவான தன்மையிலும் இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் ஊடாக அதன் அரசியலமைப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டு முறையான நடைமுறைகளைப் பின்பற்றி ஒரு இணையப் பாதுகாப்புச் சட்டம் சரியான தன்மையில் உருவாக்கப்படுமாக இருந்தால் இணைய வன்முறைகளை மிக வினைத்திறனாகக் கட்டுப்படுத்த முடியும்.

அதற்கான வாய்ப்புகள் அரசியல் மற்றும் சட்டப் பரப்பிலே உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக இருக்கின்றது” என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!