பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் – யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

நேற்றைய தினம் (4) கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும்,  பொது மக்களும் நேற்று மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்றைய தினம்(5) தங்களது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இக்கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளையும், உரிமை மீறல்களையும், வடக்குக் கிழக்கிலே இடம்பெறும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் கண்டிக்கும் வகையிலும், தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்னிறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், வடக்கினைச் சேர்ந்த பல சமூக அமைப்புக்களும் சேர்ந்து நேற்று இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியிலே அமைதி வழிப் போராட்டம் ஒன்றிலே ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைய தினம் (4) கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்திலே ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்களிலே நீர்த்தாரைகளும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.  மாணவர்களை இழுத்தும், தள்ளியும், நிலத்தில் வீழ்த்தியும் பொலிஸார் மிகவும் மோசமான முறையிலே வன்முறையிலே ஈடுபட்டனர். போராட்டத்திலே பங்குபற்றிய மாணவர்களிலே சிலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை இலங்கையில் சுதந்திர தினத்தன்று கூட அங்கு வாழும் தமிழ் மக்களுக்குச் சுதந்திரமாக ஒன்று கூடவும், தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடவும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டியது.30 வருட ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவும், தம்மீது தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கம், சிங்கள பௌத்த மயமாக்கல் என்பவற்றுக்கு எதிராகவும், அரசியற் கைதிகளின் விடுதலை, காணமால் ஆக்கப்பட்டோருக்கான நீதி போன்ற விடயங்களிற்காக தமிழ் மக்களின் போராட்டங்கள் வடக்குக் கிழக்கிலே தொடர்ந்த வண்ணம் உள்ளன.  இந்தப் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்ப்பதனைத் தவிர்த்து, தனது பெரும்பான்மைவாத வன்முறையினைத் தமிழ் மக்கள் மீது அரசு தொடர்ந்தும் ஏவி வருகிறது.  நேற்று மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை இலங்கையில் சுதந்திர தினத்தன்று கூட அங்கு வாழும் தமிழ் மக்களுக்குச் சுதந்திரமாக ஒன்று கூடவும், தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடவும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டியது.

அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்று மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!