பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு தொடர் சட்ட போராட்டம்…!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான தொடர் சட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மீதான நீதியற்ற தடையை சவாலுக்குட்படுத்தவும், சிறீலங்காவில் இனவழிப்புக்கான மறைமுக ஆதரவை இல்லாமல் செய்யவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் மேன்முறையிட்டிருந்தது.

பிரித்தானிய உள்துறை செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த முறைமையானது நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், அதன் காரணமாக சட்ட வலுவற்றது என்றும் கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ஆணைக்குழு தீர்ப்பளித்திருந்தது.

அச் சட்டவிரோதச் செயலுக்கு பரிகாரமாக, பிரித்தானிய உள்துறை செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பான முடிவை மீள் பரிசீலனை செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.

பிரித்தானிய உள்துறை செயலாளர் மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்குள் பேணும் தனது முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார்.

இந்த முடிவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேன்முறையீடு செய்திருந்தது.

2022ம் ஆண்டு மேன்முறையீடு செய்திருந்த இந்த வழக்கு 2024ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி நீதிமன்றத்திற்கு வருகின்றது..

 

நீதியற்ற இந்த தடையை நீக்கும் செயற்பாடுகள் மற்றும் சட்ட சவாலுக்கான இந்த மேன்முறையீடானது அடுத்த கட்டத்துக்கு நகர்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கடமை என்பதை உணர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நீதி போராட்டத்திற்கு அனைவரும் கரம் கொடுப்போம் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!