நல்லூரானுக்கு நாளை கொடி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை – ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மகோற்சவத்துக்கு முதல் நாளான இன்று – ஞாயிற்றுக்கிழமை கொடிச்சீலை கையளிக்கும் மரபார்ந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு, சட்டதாதர் சிவன் ஆலயப்பகுதியில் வதியும் செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்து வரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.

நாளை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 4:45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், செப்ரெம்பர் 04ஆம் திங்கட்கிழமை திகதி இரவு 7:00 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்குக் கார்திகை உற்சவமும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 06:45 மணிக்கு சூர்யோற்சவமும், 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 06:45 மணிக்கு சந்தான கோபாலர் உற்சவமும், அன்று மாலை மாலை 4:45 மணிக்குக் கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.

செப்ரெம்பர் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06:45 மணிக்கு கஜாவல்லி – மஹாவல்லி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு வேல் விமானமும், 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06:45 மணிக்கு மாழ்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

செப்ரெம்பர் 13 திகதி, புதன்கிழமை காலை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. அன்று காலை 06:15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

செப்ரெம்பர் 14 திகதி, வியாழக்கிழமை காலை 06:15 மணிக்குத் தீர்தோற்சவமும், 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 4:45 மணிக்கு பூங்காவன உற்சவமும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4:45 மணிக்கு வைரவர் சாந்தியும் நடைபெறவுள்ளன.

மகோற்சவ கால ஏற்பாடுகள் யாவும் யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உற்சவ காலத்தில் இன்று ஆகஸ்ட் 20 முதல் எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி வரை ஆலயத்தை சூழவுள்ள யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி, செட்டித்தெரு வீதி ஆகிய வீதிகளின் ஊடான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உற்சவ காலத்தில் ஆலயச் சுற்றாடலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பொலீஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதுடன், சுகாதாரம், நீர் வியியோகம், சுத்திகரிப்புப் பணிகள் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!