கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மத்திப் பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் உடைகள் மீட்கப்பட்ட பகுதியிலேயே இன்று அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே. வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் முன்னிலையில் இந்த அகழ் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்வதற்காகக் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தைத் தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. சம்பவம் தொடார்பாகக் கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இது தொடர்பாக மறுநாள் – 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதோடு, மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் இன்று அகழ்வு பணிக்கு உத்தரவிடப்பட்டது.

அகழ்வுப் பணிக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!