பொலிஸ் திணைக்களம் அமைச்சு மட்டத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு அடி பணியாது சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும், தன்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனேயே வாக்குமூலம் அளிக்கின்ற போது கேள்விகள் தொடுக்கப்பட்டன என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுட்டிக் காட்டியுள்ளார்.
இம்மாதம் 3ஆம் திகதி மருதங்கேணியில் பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினருக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடந்த முரண்பாட்டு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது தடவையாக சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கடந்தவாரம் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு தயாராகிய வேளையில் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தேன். அதன்போது என்னிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமையும் வாக்குமூலம் வழங்குவதற்கு இணங்கியிருந்தேன்.
இந்நிலையில் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே என்னைக் குற்றவாளியாகக் காண்பிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடனேயே இருந்தது.
இந்த விடயத்தில் பொலிஸ்தரப்பு சுயாதீனமாக செயற்பட வேண்டும். அவர்கள் அமைச்சு மட்டங்களில் இருந்து வருகின்ற உத்தரவுகளுக்கு அடிபணியக்கூடாது. தொடக்கத்தில் இந்த விடயத்தைச் சமரசமாகத் தீர்ப்பதற்குப் பொலிஸ் தரப்பு முனைந்தது. அதன்போதே பொலிஸ் தரப்பில் காணப்படுகின்றன தவறுகள் வெளிப்பட்டு விட்டன.
இந் நிலையில் தற்போது என்னிடத்திலும் எமது ஆதரவாளர்களிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாறெனினும், பொலிஸாரின் இந்தப் பக்கம் சார்ந்த நடடிவக்கைகளின் பின்னால் யார் உத்தரவிடுவது, யார் இருக்கின்றார்கள் என்பதெல்லாம் நன்றாகவே தெரிகின்றது என்றார்.
