இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் போதனைசார் வள ஆளணியினரும் தமது வேலைத்தளங்களில் உள்வருகை மற்றும் வெளிச் செல்கையை உறுதிப்படுத்தும் வகையில் வரவுப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற “கோப்” குழு (The Committee On Public Enterprises – COPE) பரிந்துரை செய்துள்ளது.
“கோப்” குழுவின் பரிந்துரைக்கமைய, அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் வரவுப் பதிவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவைத் தருமாறு துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவிடம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு கோரயிருக்கிறது.
பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு( “கோப்” குழு) மற்றும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாளர்களின் வரவுப் பதிவு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அதன் முடிவில் அரசாங்கத்தில் பணியாற்றும் அனைவரும் தமது வருகை மற்றும் வெளிச் செல்லலை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என “கோப்” குழுவின் தலைவரால் சுட்டிக் காட்டப்பட்டது.
அதனடிப்படையில், போதனைசார் பணியாளர்களின் வரவுப் பதிவு நடைமுறையைப் பின்பற்றுவதற்கு பொருத்தமானதொரு திட்டத்தை முன்மொழயுமாறு துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுத் தலைவரிடம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடிதம் மூலம் கோரியருக்கிறார்.
அரசாங்கத்தில் பணியாற்றும் அனைத்துத் தரப்பினரும் பதவி வேறுபாடன்றித் தமது உள் வருகை மற்றும் வெளிச் செல்கை நேரங்களைப் பதிவு செய்தலைக் கட்டாயாமாக்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு அரசாங்க நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றிக்கை மூலம் கைவிரல் பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தச் சுற்றறிக்கை மீளாய்வின் படி “அமைச்சர்களின் பணியாட்தொகுதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உட்பட அரச ஊழியர்கள் யாவரும் தமது சேவை நிலையங்களுக்கு உள்வருவதையும், வெளிச்செல்வதையும் விரலடையாளப் பதிவு இயந்திரங்களின் மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.