ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், இடையில் மூண்டிருந்த ‘அரசியல் போர்’ காரணமாக இரு தரப்புக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம் ஊடாக அதற்கான அழைப்பையும் அனுப்பினார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கான பெரும்பான்மைப் பலம், அடுத்தகட்ட அரசியல் நகர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடவே நேற்றிரவு அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பங்கேற்றிருந்தாலும் பெரும்பாலான மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் மொட்டுக் கட்சியின் மாவட்டத் தலைவர்களாகச் செயற்படுகின்றனர். அவர்கள் மாத்திரமே பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை அழைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தாலும், மாவட்டத் தலைவர்களை அழைப்பதாக இருந்தால் கட்சிக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என மொட்டுக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், அந்தக் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மொட்டுக் கட்சிக்கு தெரியப்படுத்தப்படாமல் மாவட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தாலேயே, மேற்படி சந்திப்பில் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கக்கூடாது என மொட்டுக்கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகின்றது. ஒரு தரப்பு ரணில் பக்கமும், மற்றைய தரப்பு மாறுபட்ட நிலைப்பாட்டிலும் உள்ளன.
நேற்றைய சந்திப்பின்போது ஒளி – ஒலிபரப்புச் சட்டம், பொருளாதாரம் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரமுனவால் அமைச்சுப் பதவிக்காக வழங்கப்பட்ட பட்டியலிலுள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் மறுத்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே நேற்றைய கூட்டத்தில் பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடும்போக்குடன் நடந்து கொண்டதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான உறவு ஏறக்குறைய முறிவடைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.