யாழ். போதனா வைத்தியசாலைக் கழிவுகளை கோம்பயன்மணல் மயானத்தில் எரியூட்ட இணக்கம்!

யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்றுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்தமையால் இடத்தெரிவில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் இந்த விடயம் ஆராயப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி பங்கேற்று சில விளக்கங்களை வழங்கினார்.

‘மருத்துவக் கழிவுகள் (கிளினிக்கல் வேஸ்ட்) என்பதில் உடலின் சில பாகங்கள், குருதி, சிறுநீர் போன்றவைதான் இருக்கும். முழுமையான உடலை தகனம் செய்கின்றார்கள். அதில் சில கழிவுகள் எஞ்சும். ஆனால் மருத்துவக் கழிவுகளை எரியூட்டிகள் ஊடாகத் தகனம் செய்யும்போது எவையும் மிஞ்சாது. சூழலுக்கு எரியூட்டி ஊடாக புகை செல்வதே தெரியாது. எரியூட்டியில் 650 டிகிரியில் மருத்துவக் கழிவுகள் முதலில் தகனம் செய்யப்படும். பின்னர் 800 தொடக்கம் ஆயிரம் செல்சியஸ் வெப்பத்தில் அவை இரண்டாவதாக தகனம் செய்யப்படும். இதனால் சூழல் பாதிப்பு ஏற்படாது. இதை மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிறிய எரியூட்டி உள்ளது. எதிர்காலத்தில் அதுவும் இயக்கப்படும்’ என்று மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கோம்பயன்மணல் மயானத்தில் ஏற்கனவே உடல்கள் எரியூட்டப்படுகின்றன. அங்கே மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்பு இருக்காது என்ற கருத்தை முன்வைத்தார். மக்களின் கருத்துக்களை கேட்டு முடிவு செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டினார். அதேபோன்று யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோது இது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. மக்களின் கருத்துக்களைக் கேட்டு அதற்கு அமைவாகச் செயற்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கோம்பயன்மணல் மயானச் சபை சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதி, எரியூட்டி அமைப்பதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். எரியூட்டியின் புகைபோக்கியின் உயரம் 22 மீற்றராகும் என்று எமக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே சூழல் பாதிப்பு ஏற்படாது என்ற வகையில் நாமும் இணங்குகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், இ.அங்கஜன் மற்றும் வடக்கு மகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் இணக்கம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!