நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டுக் காயங்களுடன் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து நெடுத்தீவுக்கு மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.