யாழ். பல்கலையில் அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று புதன்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழககத்தினுள் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பணியாளர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படைக்கு எதிராகக் குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. “உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.”,
“புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.” ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988 மார்ச் 19ஆம் திகதி அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.  கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அன்னை பூபதி உயிர் நீத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!