யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சூசைப்பிள்ளை சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
2023ஆம் ஆண்டுக்கான யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இரண்டாவது தடவையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தோற்கடிக்கப்பட்டது. இதனால் இம்மானுவேல் ஆனல்ட் தனது முதல்வர் பதவியை இழந்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால், இதன் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சூசைப்பிள்ளை சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.
ஆனால் இப்போது அனைத்துக் கட்சிகளிலும் உடைவு ஏற்பட்டு தனித்தனிக் குழுக்களாகவும் மற்றைய கட்சியுடனும் பிரிந்து கிடக்கின்றனர். இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்மொழிவை ஏனைய கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா அல்லது வேறேதும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.