யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வரவு வீதத்தைப் பூர்த்தி செய்யாத மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு சமரசமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதியும், பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளரும் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விசாரணைகளுக்குச் சமூகமளித்திருந்தனர்.
மாணவர் வரவு தொடர்பாக ஆராய்ந்த விஞ்ஞான பீடச் சபை, வரவின்மை காரணமாகப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாத மாணவர்களைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கு அனுமதிப்பதெனவும், அவர்கள் தவற விட்ட அலகுகளுக்கென விசேட பரீட்சைகளை நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளது என்றும், பீடச் சபையின் சிபார்சு மூதவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் பல்கலைக் கழக அலுவலர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து முறைப்பாடு சமரசமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.