அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்த முடியாது என்று அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அரசாங்கம் விரைவில் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கும், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன் பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதியை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியாகவும், மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை அதற்கான தபால் மூல வாக்களிப்பு நாள்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்படக் காகிதாதிகளை அச்சிடுவதற்கான நிதியைத் திறைசேரி விடுவிக்காத காரணத்தினால் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் திணைக்களம் சவால்களைச் சந்தித்து வந்தது. முதலில் கடந்த மார்ச் 9 ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டு, அது பிற்போடப்பட்ட பின், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதியை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திகதியிலும் தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதாகத் தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.