யாழ். பல்கலையில் வெற்றிடங்கள் நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு,

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ் ஆளணி வெற்றிடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவானவை ஆகும்.

நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் போதனைசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், அந்தப் பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

எனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட தாபன வழிகாட்டல்களை மீறி வேலைகள் உதவியாளர் மற்றும் வேறு சில வெற்றிடங்களைத் தனியார் நிறுவனம் ஊடாக நிரப்புவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கிறோம்.

இந்த நிலமை அப் பல்கலைக்கழகப் பணியாளர்களிடையே திருப்தியின்மையை ஏற்படுத்தியிருப்பதுடன், அதற்கெதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர்.

எனவே இது விடயத்தில் உடனடியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வை வழங்கத் தவறினால் நாம் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை” என்று உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!