கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கபட்ட சிறுமியின் தந்தையார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலைக்கு சிறுமி இரண்டு மாதங்களாகச் செல்லாதது குறித்து பாடசாலை நிர்வாகம் தாயாரை வினவியபோது, உரிய பதிலின்மை மற்றும் முரண்பட்ட பதில்கள் காரணமாக சந்தேகம் வலுத்ததையடுத்து, மாணவியின் தந்தை குறித்த விடயத்தை அறிந்து பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான குறித்த மாணவி, அவரது தாயின் கள்ளத் தொடர்பில் இருந்த நபரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்ற நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் பேரில், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
