அனர்த்த நிலைமைகளில் மாணவர்கள் பதில் பரீட்சை நிலையங்களை பயன்படுத்தலாம்

கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வாகனங்களில் மாற்று வீதிகளைப் பயன்படுத்தியோ அல்லது ரயில் சேவையையோ பயன்படுத்தி தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட வினாத்தாள்களே உள்ளதால், கண்டிக்குச் செல்லக்கூடியவர்கள் அனைவரும் தத்தமது ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கே சென்று பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே கடும் சிரமம் இருந்தால் மட்டுமே மாற்றீடாக அருகிலுள்ள பாடசாலையைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

கற்பாறை சரிந்து விழுந்த இடம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த இடம் இன்னும் மிகவும் நிலையற்ற தன்மையில் உள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கீழே சரிந்த பாறைக்கு சமமான மற்றொரு பாறைப்பகுதி மேலே இருப்பதாகவும், மழையுடன் அது வீதியில் விழும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த அபாயம் நீங்கும் வரை வீதி திறக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!