யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளைக் கோரி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமலானவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புக்கள் இந்த கோரிக்கையை விடுத்திருந் தன.புதைகுழிகளை அகழும் செயற்பாடுகளில் சர்வதேசத்தின் மேற்பார்வை மற்றும் தொழினுட்ப உதவிகளை வழங்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்தக் கோரிக்கையை யே,சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வௌியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசாங்கத்திற்கு 07 அம்ச முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம். மனித உரிமைகள் பேரவையிடமும் இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். கடந்த 27 ஆம் திகதி வரை, செம்மணி-சித்துப்பாத்தியில் குழந்தைகள் உட்பட மொத்தமாக 101 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வு செயல்முறை உண்மை மற்றும் பொறுப்புக் கூற லுக்கான ஒரு அவசியமான, ஆரம்பப்படியாகும். அகழ்தல் மற்றும் விசாரணைகளுக்கு இலங்கை அரசு இணங்கிச் செயற்பட வேண்டும்.சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
மரண விசாரணைக்கான மினசோட்டா நெறிமுறை போன்ற தரநிலைகள் – புலனாய்வு நடைமுறை, தடயவியல் மற்றும் இறந்தவர்கள், அவர்களது குடும்பங்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் தொடர்பானவை விடயங்களிலும் கவனம் செலுத்தப்படுவதை யும் ஆணைக்குழு உறுதி செய்கிறது.
ஒவ்வொரு எலும்புக்கூடுக்கும் பின்னால் கற்பனை செய்ய முடியாத துன்பங்களைத் தாங்கிய ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தடயவியல் விசாரணைகள் மனித கண்ணியத்திற்கு மிகுந்த மரியாதையுடனும், குடும்பங்களின் முழு பங்கேற்புடனும் நடத்தப்பட வேண்டும். இந்த செயல்முறைகள் இந்த குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தொடர்புடைய இலங்கை ராணுவ வீரர் ஒருவர் 1998 ஆம் ஆண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, செம்மணிப் புதைகுழி தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்துள்ளது.
