வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவதுவரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனைப் பற்றிய விளக்கவுரையை ஆற்றுகிறார்.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஆரம்பித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான மொத்த அரச செலவினமாக 4,218 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அரச செலவினமாக 6, 978 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரச செலவினம் 2,760 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் அதிகளவான தொகை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை அல்லது வரவு – செலவுத் திட்ட உரையை முன்வைத்துள்ளார்.

இந்த முறை வரவு – செலவுத் திட்டத்னூடாக, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி ஆகிய துறைகளுக்குக் கடந்த காலங்களைக் காட்டிலும் கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களின் வேதனம் கணிசமான அளவு அதிகரிக்கப்படுவதுடன், தனியார் துறையினரின் வேதனத்தை நிறுவன கட்டமைப்பினூடாக அதிகரித்துக் கொள்ளும் மூலோபாய திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!