அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரேசர் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே சந்திப்பின் போதே உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரேசர் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன் போது உடன்பாடு காணப்பட்டது.
கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
உலக வங்கி இலங்கைக்கு வழங்க அங்கீகரித்துள்ள கடன் உதவியை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை முன்னேற்றத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்க முடியும் என இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதற்காகப் புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கும், பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்துக்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
2025ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் துறைமுக அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள இருப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குறிப்பாக வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கில் 3 முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.