இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் – இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கில், பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனையை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, ஞானசார தேரருக்கு ரூபா 1, 500 அபராதமும் விதித்தார்.
2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகத் தவறிய ஞானசார தேரருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீதான விசாரணையின் போதே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” எனக் கூறியதன் மூலம் இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராகப் பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
