வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு ஆராய்வு!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி, வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், வாகன இறக்குமதியின் போது எதிர்நோக்கப்படக் கூடிய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைக் கருத்திற் கொண்டு இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

வருமான வரிக்கு உட்படாத ஓய்வூதியதாரர்களிடம் அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை அவர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான எளிமையான முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதேநேரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த பெறுமதி சேர் வரி சேகரிப்பு செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், வரி இணக்கம் மற்றும் வரி வருமானம் ஈட்டுதல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன், விரிவான டிஜிட்டல் முறைமையை விரைவில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கின்றது.

தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!