கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையருக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும். கடவுச்சீட்டுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு சிலர் ஐந்து முதல் ஆறு மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அச்சிடும் பணிகள் புதிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதையடுத்து இந்த நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.
கொள்கை ரீதியாகக் கடந்த அரசாங்கம் முன்னர் மேற்கொண்ட தவறான தீர்மானமே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணம்.
இதேவேளை, வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கான பொறுப்பை புதிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.