வடமத்திய மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் தரம் 06 மற்றும் 07 மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னராகவே வெளிவந்தமைக்குக் காரணமான ஆசிரியர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரீட்சை வினாத்தாள்களை வெளியட்டமைக்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த ஆசிரியர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
தரம் 06 மற்றும் 07க்குரிய புவியியல் பாட வினாத்தாள்களே கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே வட மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னராக வெளிவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
தரம் 11 சிங்கள இலக்கியம் ஜவரி 06 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அவ் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் கசிந்தது.
அதன் பின்னர், வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும் முறையே ஜனவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில் பரீட்சைகளுக்கு முன்னதாக கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததை அடுத்து, மேற்படி பரீட்சைகளை இடைநிறுத்தவும், மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.