கைது செய்யப்பட்டிருந்த ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி, தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தைச் சேர்நத உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிரிஹான பொலிஸ் தலைமையகத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல நடிகை மாதவி அந்தோணியின் கணவரும், பிரபல எழுத்தாளருமான கசுன் மகேந்திர ஹினடிகல, தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடை ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், சிவில் உடையில் நின்ற மூன்று பேர் கசுன் மகேந்திர ஹினடிகலவிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். வீட்டுக்கு அருகில் என்பதனால் தான் அதை எடுத்துவரவில்லை என்று அவர் தெரிவித்திருந்த போதிலும், அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதோடு, தனது கைகளைக் மடக்கிப் பிடித்துத் துன்புறுத்தியபடி தன்னை முச்சக்கரவண்டி ஒன்றில் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றதோடு, தொலைபேசி மூலம் தனது மனைவிக்குத் தெரியப்படுத்தியதும், அவர் தனது கைக்குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டுப் பொலீஸ் நிலையத்துக்கு வந்த போது, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தேவையற்ற முறையில் சட்டத்துக்கு முரணாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தான் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கசுன் மகேந்திர ஹினடிகல தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பதில் பொலீஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கொழும்பு-தெற்கு பொலிஸ் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய அடையாள அட்டை வைத்திருக்காத காரணத்துக்காகவே அவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறு செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி கே.பி. மனதுங்க தெரிவித்துள்ளார்.
