பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு ஊடாகக் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வர்த்தக, வாணிபத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்ஹ இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரிசி, தேங்காய் உட்பட பண்டிகைக் காலத்துக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களைத் தடையின்றிக் கிடைக்கச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாளாந்தம் இரண்டு இலட்சம் கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளனர். அந்த விநியோகம் அரசாங்க விற்பனை வலையமைப்பான சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலைக்கு வழங்கப்படும். அதே போல சுமார் பத்து இலட்சம் தேங்காய்களையும் இரு வார காலத்துக்கு சதொச விற்பனை நிலையங்களினுடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.