இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று காலை சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், பிரதம நீதியரசராக நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ, 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்புச் சட்டத்தரணியாக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ள இவர், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராகவும், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவியான முர்து பெர்னாண்டோ, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டத்துறை இளமானிப் பட்டம் பெற்றுள்ளார்.