புயல் அபாயம், வெள்ள அனர்த்தத்தின் மத்தியிலும் தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் நாள் நிழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களாக இருந்த பகுதிகள் சிரமதானம் மூலம் சீர்செய்யப்பட்டு, மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, காலை முதல் கடும் மழையும், வெள்ளப் பெருக்கினால் மக்கள் அவதியுற்ற போதிலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான நேரத்தில் மழை இல்லாமல் நிகழ்வுகளைச் செய்யக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கொடிகாமம், சாட்டி மற்றும் எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லங்களிலும், கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
மாலை 06:05 மணிக்கு மணி ஒலிக்க, பொதுச் சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் நாள் பாடல் ஒலித்தது. சம நேரத்தில் மாவீரர்களின் உறவினர்கள் ஈகச் சடர்களை ஏற்றிக் கண்ணீர் மல்க உறவுகளை நினைந்துருகினர்.