நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகியது.
யாழ்ப்பாண நிர்வாக மாவட்த்துக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் வைத்து அந்தந்த வாக்களிப்பு நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. அவை மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்வதற்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும், பதில் அரசாங்க அதிபருமான ம. பிரதீபன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும், பதில் அரசாங்க அதிபருமான எஸ். முரளிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்புப் பணியில் பொலீஸாருக்கு மேலதிகமாக பொலீஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
