இலங்கை – கனடா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
இருவருக்குமிடையிலான சந்திப்பு, நேற்றுப் புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துதல், பெண்களின் தொழில்முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையின் முக்கியத்துவம் உட்பட அபிவிருத்தியின் முக்கிய பகுதிகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் அபிவிருத்தியில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் இதன்போது விவரித்தார்.
இந்த சந்திப்பின் போது கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.