அளம்பில் துயிலுமில்லக் காணியை அபகரிக்க முயற்சி – எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம்!

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பினாலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் இன்று(02) காலை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள்,குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோரின் தலையீட்டால் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர். குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!