வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல – மனோ கணேசன்!

வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா என்று கேட்க விரும்புகிறேன்.

தனது அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான இந்த தொழிற்சங்கத்துக்கு பொது வெளி போராட்டங்களின் போது மது போதையை தவிர்த்து, ஒழுக்கத்துடன், சட்டம் ஒழுங்கை கடைப் பிடிப்பது பற்றி அறிவுரை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்ளவும் விரும்புகிறேன்.

இதுபற்றி சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் டிரான் அலசிடம் உரையாடி, இந்த வன்முறை காடையர்கள், வேலுகுமார் எம்பியை வன்முறையில் கொல்லப்பட்ட எம்பி அமரகீர்த்தியின் நிலைமைக்கு தள்ளிவிட முயல்கிறார்களா என்று கேட்டேன்.

தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில், நேற்று கண்டி மாவட்ட புசல்லாவையில், தனது தொகுதி மக்கள் பணி தொடர்பில் பயணித்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்று, தகாத வார்த்தைகளால் பேசி, பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள். இது தொடர்பான காணொளி தற்போது பொது வெளியில் பரவலாக உள்ளது.

இந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தொழிற்சங்க போராளிகள் அல்ல, ரவுடித்தனம் செய்யும் மது போதை காடையர்கள் என்ற என்ற பதிலும் இயல்பாக கிடைக்கின்றது.

இது தொடர்பில் வேலுகுமார் எம்பியை, கண்டி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் முறையீடு செய்யும்படியும், நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பும்படியும் கூறியுள்ளேன்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, சம்பள நிர்ணய சபையிலும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் அங்கம் வகிக்கவில்லை.

எனினும் இந்நிலையிலும் கூட நாம், தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவே உள்ளோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!