வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பொறியியல் பேராசிரியர் அ. அற்புதராஜா முன் நிலையில்!

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அவை கடந்த மாதம் இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவற்றில், பெரும்பான்மை இனப் பேராசிரியரின் விண்ணப்பம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கேற்பச் சமர்ப்பிக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூவரும் நேற்று, 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர். பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் இலத்திரனியல் மற்றும் மின்னியல் துறைப் பேராசிரியர் அ. அற்புதராஜா முதல் நிலையிலும், வவுனியா பல்கலைக்கழகப் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் திருமதி அனந்தினி நந்தகுமாரன், வியாபாரக் கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ. புஸ்பநாதன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!