ரணிலை ஆதரிக்காவிட்டால் மீண்டும் எரிபொருள் வரிசை – அச்சுறுத்தும் அமைச்சர்!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும். அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர்,  செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் இடம்பெறும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என சில குழுக்கள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளின் தேவைக்காகவே இவ்வாறு  பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டில் அடுத்து இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிப் பரந்துபட்ட கூட்டணியை அமைக்க இருக்கிறோம். அதில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருளுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும். அந்த பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மேலும் நாட்டை 2048வரை கொண்டுசெல்ல தேசிய கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச்செல்ல ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போகும். நாட்டை முன்னெடுத்துச்செல்ல முடியுமான வழிகாட்டலை ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார். இந்த வழியை தவிர வேறு வழி இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியில் இருந்த நிலையை தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால், எந்தளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை எங்களுக்கு உணர்ந்துகொள்ள முடியும். அன்று டொலரின் பெறுமதி அதிகரிக்கும்போது பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொணடே சென்றது. அப்பாேது  ஊடகங்களும் பாரியளவில் பிரசாரம் வழங்கி வந்தன. ஆனால் தற்போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலையும் குறைவடைந்து வருகிறது. ஆனால அது தொடர்பில் ஊடகங்களின் பிரசாரம்  குறிப்பிடத்தக்களவில் இல்லை.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைவரும் ஒரு தேசமாக ஒன்று திரளவேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் இந்தியாவை முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருந்தாலும் தேசம் என்று வரும்போது ஒரு கொள்கையில் பிளவுபடாமல் இருக்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!