தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பேச அனுமதிக்காதது மிகப் பெருந்தவறு – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்றும்,
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை கடந்த 31 ஆம் திகதியன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நிறுத்தப்பட்டமை தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்தில் உரையாற்ற இருந்தார். அந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்குதல் காரணமாகக் கைவிடப்பட்டது.

இதற்கு மாணவர்களால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும். ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.

மாணவர்களின் நெருக்குவாரத்துக்குப் பல்கலைக்கழக நிருவாகம் பணிந்து சென்றமையும் ஒரு தவறான செயலாகும். எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறாது இருப்பதனை மாணவர்களும், நிருவாகமும் உறுதி செய்வது அவசியம். பல்கலைக்கழகம் என்பது அறிவுசார் கருத்துப் பரிமாற்றங்களுக்குரிய ஒரு களம். வெவ்வேறுபட்ட அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் எந்தத் தடைகளும் இல்லாத வகையிலே உரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும் உரிய வெளியும், சுதந்திரமும் பல்கலைக்கழகத்தினுள் இருப்பது பல்கலைக்கழகத்தின் அறிவு சார் செயன்முறைகளுக்கு மிகவும் அவசியம்.

இலங்கை அரசினதும், அதனது இராணுவக் கட்டமைப்பினதும் கடுமையான கண்காணிப்புக்கும், கட்டுப்படுத்தல்களுக்கும் உள்ளாகி இருக்கும் எமது பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தமது அரசியற் கருத்துக்களை சுயாதீனமாக முன்வைப்பதற்கும், நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், போராட்டங்களிலே ஈடுபடுவதற்கும் எதிராகப் பல தடைகள் ஏற்படுத்தப்படுவதனை நாம் அறிவோம். இதன் மிக அண்மைய வடிவத்தினை இந்த வாரம் மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திலே ஜனநாயக ரீதியாகப் போராடிய எமது பல்கலைக்கழக‌ மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திலே நாம் கண்டோம்.

அரசினாலும், இராணுவத்தினாலும் அச்சுறுத்தலினையும், கட்டுப்படுத்தலினையும் எதிர்நோக்கும் எமது பல்கலைக்கழக‌ மாணவர் சமூகத்தினைச் சேர்ந்த ஒரு பிரிவினரே, சுவாஸ்திகா அருளிங்கம் பங்கேற்க இருந்த நிகழ்வு தொடர்பிலே ஒரு கட்டுப்படுத்தற் செயன்முறையில் ஈடுபட்டமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், நம்பிக்கையீனத்தினையும், கவலையினையும் அளிக்கிறது.

இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடுமோ என நாம் அச்சமடைகிறோம்.
பல்கலைக்கழகத்தினுள் கல்விச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும், கருத்துப் பரிமாறல்களுக்கான‌ சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுப்பதும், மாற்றுக் கருத்துக்களுக்கான இடத்தை வழங்குவதும் பல்கலைக்கழகத்திலே கற்கும் மாணவர்கள், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழகத்தினை இயக்கும் நிருவாகிகள் ஆகிய அனைவரதும் கூட்டுப் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலே இருந்து நாம் ஒரு போதும் பின்வாங்கக் கூடாது.

பல்கலைக்கழகத்தின் கல்விச் சுதந்திரம் தொடர்பிலே இந்தத் தரப்புக்களிலே ஒரு தரப்பு மற்றைய தரப்புக்கு எந்த விதமான அழுத்தங்களையும் கொடுக்கக் கூடாது. அதே போல பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இருந்து வரும் ஒடுக்குமுறைகளை நாம் இணைந்து எதிர்கொள்ள‌ வேண்டும். எமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் கல்விச் சுதந்திரம் தொடர்பிலே இவ்வாறு கூட்டுணர்வுடனும், கூட்டுப் பொறுப்புடனும் நாம் செயற்படுவதன் மூலமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும் எல்லா அச்சுறுத்தல்களையும் எம்மால் முறியடிக்க முடியும்.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீள அழைக்கப்பட்டு சட்டத் துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும். பல்கலைக்கழகத்தினுள் கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுடனும், பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்புக்களுடனும் உரையாடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செயற்பாடுகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம் – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!